கார்ப்பரேட் நிறுவனங்களின் அதீத பணி அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 9 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் மேலாளராகப் பணியாற்றிய பெண் ஒருவர், தனது பணியைத் துறந்து தற்போது ஆட்டோ ஓட்டி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘நெஸ்ரின் மித்லாஜ்’ என்ற பெண் தொழிலதிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவின் மூலம் இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநரைத் தற்செயலாகச் சந்தித்துப் பேசியபோது, கார்ப்பரேட் உலகின் தொடர் பதற்றம் மற்றும் அழுத்தங்களிலிருந்து விடுபடவே இந்த முடிவை எடுத்ததாகவும், தற்போது சொந்தமாக ஆட்டோ ஓட்டி மாதம் சுமார் ₹60,000 வரை சம்பாதிப்பதோடு மிகுந்த மன அமைதியுடன் இருப்பதாகவும் அவர் நெஸ்ரினிடம் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/reel/DX9VyA-PVmu/?igsh=d21sMDJ2d2xzY2hv

இந்தத் துணிச்சலான முடிவு குறித்து நெஸ்ரின் மித்லாஜ் தனது பதிவில், “நாம் பெரும்பாலும் பதவிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் எது நம்மை நிம்மதியாக வாழ வைக்கிறது என்பதை யோசிப்பதில்லை; கௌரவத்தை விட மன அமைதியைத் தேர்ந்தெடுப்பதே மிகத் துணிச்சலான முடிவு எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரல் பதிவு ஐடி ஊழியர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நள்ளிரவு 3 மணி கால்கள் மற்றும் தேவையற்ற மீட்டிங்குகளுக்கு மத்தியில் வாழும் தங்களுக்கு, இந்தப் பெண்ணின் கதை ஒரு மிகப்பெரிய உத்வேகம் என்றும், வாழ்க்கைக்கு ஆடம்பரத்தை விட மன அமைதியே முக்கியம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.