கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தில், 10 ஏக்கர் நிலத் தகராறைத் தீர்ப்பதற்காகக் கூட்டப்பட்ட ஊர் பஞ்சாயத்தில் ஏற்பட்ட பயங்கர மோதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் ஒரு தோட்ட வேலைக்காரர் என மொத்தம் 6 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பு கவுடா மற்றும் ரேவணசித்தப்பா ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த சொத்து தகராறைத் தீர்க்க நேற்று ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து கூட்டியுள்ளனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறவே, அப்பு கவுடா தரப்பினர் ஏற்கனவே திட்டமிட்டபடி தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் ரேவணசித்தப்பா குடும்பத்தினரைச் சரமாரியாக வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ரத்த வெறி ஆட்டத்தில் ரேவணசித்தப்பாவின் குடும்பத்தைச் சேர்ந்த துண்டப்பா, சிவபுத்ரா, சந்திரகாந்த் மற்றும் சிவபுத்ராவின் மகன்கள் ராகுல், சமர்த், தோட்ட வேலைக்காரன் சபீர் பாபுசாப் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும், அரிவாள் வெட்டு விழுந்தும் படுகாயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடூரக் கொலையை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடிய அப்பு கவுடா கூட்டத்தைச் சேர்ந்த 5 பேரை போலீசார் வலைவீசித் தேடி வரும் நிலையில், கிராமத்தில் மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுப் பதற்றம் நிலவி வருகிறது.