திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் புதிய ரேஷன் கடைகளைத் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, பொங்கலுக்கு ₹5,000 வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து, “தமிழக முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். அவர் மக்களுக்குத் தேவையானதைச் சரியாகச் செய்வார்,” என்று தெரிவித்தார்.

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அதிமுகவினர் கூறுவது குறித்துப் பேசிய அவர், “அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 210 தொகுதிகளைக் கொடுத்தால், மீதமுள்ள 24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.

இப்படி இருக்க, அவர்களால் எப்படி 210 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார். திமுக ஆட்சியில், ஊராட்சித் துறையில் 22,000 கிலோமீட்டருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தமிழ்நாடு முழுவதும் கிராமச் சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும், சுமார் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியுள்ள அனைவருக்கும் பணம் வீடு தேடி வரும் என்றும் அவர் உறுதியளித்தார். தேர்தலுக்காக லேப்டாப் வழங்கப்படவில்லை என்றும், சட்டப்பேரவையில் அறிவித்தபடி தொடர்ந்து லேப்டாப் வழங்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.