கர்நாடகாவில் ஓய்வூதியம் கேட்டு போராடிய இரண்டு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை உயிர் இழக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்த ராமையா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் 141 நாட்களாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டி உள்ளார்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இதுவரை இரண்டு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் அவரது கோரிக்கைகளை கேட்க கூட யாரும் இல்லை எனவும் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் கோரிக்கைகள் பற்றி அரசு காது கொடுத்து கேட்க கூடாத என்றும் ஓய்வூதியம் கேட்டு போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை பேர் தங்களின் உயிரை இழக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என எதிர் கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.