சீனாவின் ஷென்சென் ஏர்லைன்ஸில் பயணம் செய்ய இருந்த விமானம் திடீரென இரு பெண்பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தாக்குதலால் இரண்டு மணி நேரம் தாமதமானது. அதாவது ஏப்ரல் 1-ம் தேதி ஷென்சென் நகரில் இருந்து ஷாங்காய் நோக்கி புறப்பட்டு செல்ல இருந்த விமானத்தில், ஒருவரின் உடல் வாசனையைக் குறித்து மற்றொரு பயணி புகார் கூற, அது வாக்குவாதமாக மாறிய நிலையில் பின்னர் மோசமான அடிதடியாக மாறியது.

இந்த தகராறை நிறுத்த முயன்ற பணிப்பெண் ஒருவரின் கையை, பயணிகளில் ஒருவர் கடித்ததால் காயமடைந்தார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், அந்த பணிப்பெண் “வாய் திற, நீ என்னை கடிச்சுட்ட!” என கத்துவது கேட்கப்படுகிறது. உடனே அந்த பணிப்பெணுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இரு பெண் பயணிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மற்ற பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஏற்றி விமானம் புறப்பட்டு சென்றது.

 

ஷென்சென் ஏர்லைன்ஸ் இந்த சம்பவத்துக்கு பதிலளிக்கையில், “பயணிகளும் ஊழியர்களும் சட்டத்துக்குட்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். நாகரிகமான முறையில் பயணிக்க  கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சனங்களையும் பரபரப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. “இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் விமானம் மற்றும் ரயில்களில் பயணிக்க தடை விதிக்கப்பட வேண்டும்” என்றும், “பணியாளர்கள் சிரமம் எவ்வளவு அதிகம் என்பது இதிலிருந்தே தெரிகிறது” என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.