துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கத்தினால் நாட்டின் ஹடாய், ஓஸ்மானியே, அதியமான், மாலத்தியா, அதானா மற்றும் தியர்பாகீர் போன்ற நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் மீட்பு பணிகளும் அதிவேகமாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் துருக்கி நாட்டிற்கு உதவுவதற்காக இந்தியா முன் வந்துள்ளது.

அதாவது தேசிய பேரிடர் மீட்பு படையினர் 100 பேர் கொண்ட 2 குழுவை துருக்கிக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் நிவாரண பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகளில் மனிதர்களை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட பயிற்சி பெற்ற நாய்களும் களம் இறக்கப்பட்டுள்ளது. துருக்கிக்கும் இந்தியாவின் தற்போதைய வெளியுறவு கொள்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பல உள்ளது. குறிப்பாக சிஏஏ விவகாரத்திலும் காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவின் நிலைப்பாட்டை தூக்கி தொடர்ந்து கடுமையான விமர்சனம் செய்து வந்தது.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் இக்கட்டான நிலையில் இருக்கும் துருக்கிக்கு இந்தியா உதவியுள்ளது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியான முரளிதரன் புதுடெல்லியில் உள்ள துருக்கி தூதரகத்திற்கு நேரில் சென்று கூறியதாவது “பிரதமர் மோடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர உத்தரவிட்டுள்ளார்” என கூறியுள்ளார். அப்போது துருக்கியின் தூதர் பிராட் சனல் சார்பில் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.