துருக்கியில் கடந்த 2 நாட்களாக தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு அந்த நாட்டை முழுவதுமாக முடக்கியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் உள்ள காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையான பாதிப்புள்ளாகியுள்ளது. மேலும் இந்த பாதிப்பால் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரைக்கும்  உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியதில், அந்த இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த பாதிப்பில் இருந்து உயிர் தப்பியவர்கள், தங்கள் குடும்பத்தினரை தேடி அலையும் காட்சிகள் மனதை பதைபதைக்கச் செய்யும் வகையில் உள்ளது.

இந்நிலையில் இதன் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக இணைய தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதனையடுத்து சிலர் இந்த நிலநடுக்க பாதிப்புகளை பற்றி  அச்சமூட்டும் வகையிலான பதிவுகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு பதிவிட்ட 4 பேர்  போலீசாரால் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து அவர்களிடம்  விசாரித்து வருகின்றனர்.