இன்றைய டிஜிட்டல் உலகில் பிரபலம் அடைவதற்காகவும், ரசிகர்களைக் கவர்வதற்காகவும் சமூக வலைதள பிரபலங்கள் (Influencers) பல்வேறு வினோதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண் இன்ஃப்ளூயன்ஸர் செய்துள்ள காரியம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஜப்பானின் வக்காயமா (Wakayama) பகுதியைச் சேர்ந்தவர் ஹாரி மாட்சுமோட்டோ. சமூக வலைதளங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ள இவர், சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்திக்கும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்தச் சந்திப்பில், ரசிகர்கள் பணம் கொடுத்து அவரது அக்குள்களை நுகர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடுத்தர வயதுடைய ரசிகர் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் வந்து இப்படியொரு செயலில் ஈடுபடுவதும், அதன் பிறகு அந்த இன்ஃப்ளூயன்ஸர் அவரைக்கட்டிப்பிடிப்பதும் பதிவாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, இவரது ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ள கருத்துக்கள் இன்னும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஒரு ரசிகர், “உங்களது வாசனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, உனக்காகவே நான் பிறந்தேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், ‘வாழ்நாள் விசுவாச ஒப்பந்தம்’ என்ற பெயரில் ஒரு வினோத ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி அவர்கள் எதிர்காலத்தில் ஈட்டும் அனைத்து வருமானத்தையும் மாட்சுமோட்டோவிடமே கொடுத்துவிடுவார்கள். வாழ்நாள் முழுவதும் வேறு எந்தப் பெண்ணையும் காதலிக்கவோ அல்லது திருமணம் செய்து கொள்ளவோ மாட்டார்கள்.
இந்தச் செய்தி பரவியதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் அருவருப்பானது என்றும், பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி என்றும் விமர்சித்து வருகின்றனர். “இது ரசிகர்களின் அன்பு கிடையாது, இது ஒரு மலிவான அடல்ட் என்டர்டெயின்மென்ட்” என்று ஒரு பயனர் கடுமையாகச் சாடியுள்ளார். எனினும், இந்த விமர்சனங்கள் குறித்து அந்த ஜப்பானியப் பெண் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
