வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டபோது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் அவர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டார்.

மேலும் தாக்குதல் நடத்திய கோல் தாமஸ் ஆலன் என்ற 31 வயது நபர், ரகசிய சேவை அதிகாரிகளால் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்த நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், தாக்குதல் நடத்தியவர் ஒரு “மனநலம் பாதிக்கப்பட்ட நபர்” என்று விமர்சித்தார். அந்த நபர் வெளியிட்ட அறிக்கையில் டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், டிரம்ப் அவற்றைக் கடுமையாக மறுத்தார்.

அதே சமயம், நேட்டோ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய டிரம்ப், சர்வதேசப் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா மட்டுமே அதிக சுமையைச் சுமப்பதாகக் குறிப்பிட்டார். உலக நாடுகள் தங்களின் பாதுகாப்புப் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் இந்தச் சூழலில் வலியுறுத்தியுள்ளார்.