அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து அவர்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

பதவியை ராஜினாமா செய்த கையோடு அவர்கள் தங்களை முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், த.வெ.க சார்பில் இவர்களே மீண்டும் அங்கு போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக எம்.எல்.ஏ-க்களின் இந்த அதிரடி கட்சித் தாவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், த.வெ.க-வில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மீது அதிமுக எம்.பி தனபால் கடுமையான பண மோசடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், த.வெ.க-விற்குத் தனி மெஜாரிட்டி இல்லாத சூழலில் அதிமுகவை உடைக்க நினைத்து முடியாததால் இந்தச் சதி நடந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

பதவியேற்ற உடனே ராஜினாமா செய்த இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பின்னணியை ஆராய வேண்டும் என்றும், இதற்குப் பின்னால் மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஜனநாயகத்தைக் காக்க மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அமலாக்கத்துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தனபால் வலியுறுத்தியுள்ளார்.