புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணைத் தாக்கி 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிச் செயினைப் பறித்த இரண்டு பெண்களை, போலீசார் ஒரு மணி நேரத்திலேயே சினிமா பாணியில் மடக்கிப் பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான சித்ரா, பேருந்து நிலைய கழிவறைக்குச் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்த நித்யா மற்றும் அபிநயா ஆகிய இரு பெண்கள், சித்ராவின் முகத்தில் குங்குமத்தை வீசி நிலைகுலைய வைத்துள்ளனர்.
சித்ரா போராடியபோது, அவரது கன்னத்தில் அறைந்து கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டி, ஆறரை சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டுத் தப்பினர்.
புகாரைப் பெற்ற போலீசார் உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்தப் பெண்கள் கடலூர் பேருந்தில் ஏறியதைக் கண்டுபிடித்தனர்.
உடனே பேருந்து நடத்துநரைத் தொடர்பு கொண்டு கிருமாம்பாக்கம் காவல் நிலையம் அருகே பேருந்தை நிறுத்தச் சொன்ன போலீசார், அங்கு தயாராக இருந்து இரு பெண்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
சென்னையில் செல்போன் கடையில் பணிபுரிந்த இவர்கள், திருவிழா செலவுக்குப் பணம் இல்லாததால் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
