மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் அவசர ஆலோசனை நடத்தினார்.

ஈரான் உச்சத்தலைவர் கொமேனி கொல்லப்பட்ட பிறகு வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் குறித்து இரு தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் துப்பாக்கிகளும் ஏவுகணைகளும் தீர்வாகாது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்தப் போர் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கவும், பிராந்தியத்தில் அமைதியை மீண்டும் கொண்டு வரவும் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து செயல்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே வளைகுடா நாடுகளின் 8 தலைவர்களுடன் பேசியுள்ள பிரதமர் மோடி, தற்போது பிரான்ஸ் அதிபருடனும் கைகோர்த்துள்ளது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.