மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி மதுரை வருகிறார். அவரை வரவேற்க மதுரை மக்கள் தயாராக இருக்கிறார்கள். மதுரையில் தி.மு.க. ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் டிபன் பாக்ஸ் கொடுத்து வருகிறார். ஒரு அமைச்சருக்கு இதுதான் பணியா? என்று பொதுமக்களே கேவலமாக பேசுகிறார்கள். இன்னொரு அமைச்சர் தனது பதவி இறக்கப்பட்டதால் சைலண்ட் ஆகிவிட்டார். அவர் வருகிற தேர்தலில் நிற்பாரா? நிற்க மாட்டாரா? என்பது தெரியவில்லை. உங்க பொங்க சோறும் வேண்டாம், பூசாரித்தனமும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

மேலும், மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடுகள் தொடர்பாக, “மாதந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி இருந்தால், இந்த முறைகேடுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. இந்தக் குற்றச்செயலுக்கு அமைச்சர்களும் நேரடி பொறுப்பேற்க வேண்டும்.

மேயரின் கணவர் நிழல் மேயராக செயல்பட்டு தற்போது கைது செய்யப்பட்ட நிலையில், மேயர் இன்னும் பதவியில் இருப்பது விசாரணையை பாதிக்கும். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும். இல்லையெனில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள்” என்றார்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் நிலைப்பாடு குறித்து, “அவர் திசை மாறி காட்டுக்குள் வழியின்றி தவிக்கும் நிலையில் உள்ளார்” என்றும், “அ.தி.மு.க. எப்போதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கொள்கையில் உறுதியுடன் செயல்படும். எடப்பாடி பழனிசாமி அதையே தொடர்கிறார்” என தெரிவித்தார்.