மதுரை திமுக-வில் பல ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்டிருந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், தற்போது அதிமுக-வை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த 2014-ல் கட்சியை விட்டு நீக்கப்பட்ட இவர்களை மீண்டும் திமுக-வில் சேர்க்கத் தலைமை மௌனம் காத்து வந்த நிலையில், 2026 தேர்தல் நெருங்குவதால் தங்கள் அரசியல் வாழ்வை உறுதி செய்ய இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். “உங்கள் விருப்பம் போல் எந்தக் கட்சியிலும் சேருங்கள்” என அழகிரி பச்சைக் கொடி காட்டியதைத் தொடர்ந்து, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்துள்ளனர்.
இந்தத் தாவலால் மதுரையில் திமுக-வின் அதிருப்தி நிர்வாகிகளை வளைக்க அதிமுக புதிய வியூகம் அமைத்துள்ளது. பி.எம்.மன்னன் தரப்பு மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என சவால் விடுத்துள்ள நிலையில், அழகிரியின் தீவிர விசுவாசிகள் சிலர் இன்னும் திமுக தலைமை தங்களை ஏற்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். அழகிரி ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த இருவேறு நிலைப்பாடுகளால் மதுரை அரசியல் களம் தற்போது தகிக்கத் தொடங்கியுள்ளது.
