தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை முன் எப்போதும் இல்லாத வகையில் “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்வைத்துள்ளது. ராகுல் காந்தியிடம் கனிமொழி எம்.பி. பேசியபோது, 41 தொகுதிகள் மற்றும் உள்ளாட்சியில் 20 சதவீத இடங்களையும் காங்கிரஸ் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
ஆனால், “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் திமுக தலைமை, ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெளிவுபடுத்திவிட்டது. காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோரின் தொடர் விமர்சனங்கள் திமுக-வை அதிருப்தி அடையச் செய்துள்ளன. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட திமுக, தற்போது தேமுதிக-வை கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது.
தேமுதிக-வின் வரவால் பலம் கூடியுள்ள திமுக, இனி காங்கிரஸ் தனது நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை, இல்லையென்றால் “வெளியே போகட்டும்” என்ற அதிரடி நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் 2026 தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
