இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் ஆதார் கார்டை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். நமக்குத் தெரியாமல் நம்முடைய ஆதார் கார்டை தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. தங்களின் ஆதார் எண் தவறான முறையில் பயன்பட்டதா என்பதை சரிப்பார்ப்பதற்கு UIDAI இணையதளம் புதிய வசதியை வழங்கியுள்ளது.

அதாவது ஆதார் பயன்பாட்டு வரலாறு குறித்து நாம் இந்த இணையதளம் மூலம் காணலாம். இதன் மூலமாக கடந்த 6 மாதங்களில் நம்முடைய ஆதார் எண்ணை நாம் எங்கு எங்கு பயன்படுத்தி உள்ளோம் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். ஆதார் பயன்பாட்டு வரலாற்றை Myaadhar செயலி அல்லது https://resident.uidai.gov.in/aadhaar-auth-history என்ற இணையதளம் மூலம் சரிபார்க்கலாம்.

இந்த இணையதள பக்கத்திற்கு சென்று திரையில் தோன்றும் பாதுகாப்பு குறியீட்டான ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடியை உள்ளிட வேண்டும். அதன் பிறகு ஓடிபி பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். உறுதிப்படுத்துதல் வகை, தேதி வரும்போது மற்றும் நீங்கள் பார்க்க விரும்பும் பதிவுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு பக்கம் தோன்றும். அதில் நீங்கள் ஒரே நேரத்தில் 50 பதிவுகளை பார்க்க முடியும். இதன் மூலம் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய அடையாளத்தை பாதுகாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.