கடந்த 2019 -ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இலங்கை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த இந்த தாக்குதலில் 270 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது குறித்து இந்தியா முன்கூட்டியே உளவு தகவல் அளித்தபோதும் அதனை இலங்கை தடுப்பதற்கு தவறியதாக அப்போதைய அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே போன்றோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சிறிசேனவால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணை குழுவும் பயங்கரவாத தாக்குதலை தடுக்க சிறிசேனா தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது. ஆனால் சிறிசேனா தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறார். இந்த சம்பவத்தில் சிறிசேனா மற்றும் அவரது அரசியல் பணியாற்றிய மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் ஏழு நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த தாக்குதல் குறித்து இந்தியாவிடம் இருந்து நம்பகமான தகவல் கிடைத்தும் தாக்குதலை தடுக்காமல் அலட்சியமாக இருந்ததற்காக முன்னாள் அதிபர் சிறிசேனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை பணத்தில் ரூ.10 கோடியை தனது சொந்த நிதியில் இருந்து இழப்பீடாக வழங்க வேண்டும். இதே போல் முன்னாள் தலைமை போலீஸ் அதிகாரி பூஜித் ஜெயசுந்தரம் உளவுத்துறை முன்னாள் தலைவர் நிலந்தா ஜெயவர்த்தனே போன்றோர் தலா ரூ.7.5 கோடியும், பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் ஹெமாசிறி பெர்னான்டோ ரூ.5 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் இந்த இழப்பீடு தொகையை ஆறு மாத காலத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.