ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பிலிருந்து இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தீவிரமாக களப்பணி ஆற்றுவதற்கு 100 பேர் கொண்ட குழுவை எடப்பாடி நியமித்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக முதலில் ஆதரவு கேட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பாஜக நங்கள்  போட்டியிடுகிறோம் என்று எடப்பாடியிடம் கூறியதாகவும், ஆனால் எடப்பாடி கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதால் கண்டிப்பாக அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற காரணத்திற்காக ஈரோடு கிழக்கில் அதிமுகவே போட்டியிடும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். அதோடு ஈரோடு கிழக்கில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்தே வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவின் வெற்றி என்பது ஓரளவு தெரிந்து விடும் என்ற காரணத்தினால் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறாராம்.

பாஜக விலகிவிட்டால் 20% சிறுபான்மையினர் ஓட்டுகளும் அதிமுகவுக்கு கிடைக்கும் என்று எடப்பாடி கணக்கு போட்டு வைத்துள்ளாராம். அதன்பிறகு ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படும்போது இரட்டை இலை சின்னம் முடங்கப்படும். அப்படி சின்னம் முடங்கப்பட்டால் அதன் பலியை ஓபிஎஸ் மீது போடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளாராம். மேலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு தரப்பும் பாஜகவிடம் ஆதரவு கேட்டுள்ள நிலையில் யாருக்கு பாஜக ஆதரவு கொடுகிறதோ அவர்களுக்குத்தான் அதிமுக சொந்தமாகும் என்றும் கூறப்படுகிறது.