தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மாநகராட்சியாக கோவை தான் இருக்கிறது. இங்கு மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில் மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்த் இருக்கிறார். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படும் 10 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேற்று குடியரசு தின விழாவின் போது பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் சிறப்பாக செயல்பட்ட 10 கவுன்சிலர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் சிறப்பாக செயல்படும் 10 கவுன்சிலர்கள் 50 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அதாவது மன்ற கூட்டத்திற்கு வருகை புரிதலுக்கு 10 மதிப்பெண், ஆக்கபூர்வ ஆலோசனை வழங்குதல் 5 மதிப்பெண், நமக்கு நாமே திட்டத்தில் பங்களிப்பு 10 மதிப்பெண், திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாளக்கத்தில் பங்களிப்பு 5 மதிப்பெண், பொது ஒதுக்கீடு இடங்களை மீட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதற்கு 5 மதிப்பெண், வரிவசூல் பணியில் பங்களித்ததற்கு 10 மதிப்பெண், மக்களிடையே நன்மதிப்பு 5 மதிப்பெண் என மொத்தம் 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

மேலும் இவற்றின் அடிப்படையில் நேற்று குடியரசு தின விழாவின் போது 100-வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், அகமது கபீர் (86-வது வார்டு), கார்த்திக் செல்வராஜ் (72-வது வார்டு), இலக்குமி இருஞ்செல்வி (52-வது வார்டு), அன்னக்கொடி (49-வது வார்டு), பிரபா (48-வது வார்டு), பிரவீன் ராஜ் (42-வது வார்டு), சரண்யா (30-வது வார்டு), ராதாகிருஷ்ணன் (18-வது வார்டு), நவீன் குமார் (5-வது வார்டு) ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.