சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலரைத் தாண்டாத வரை விலையேற்றம் இருக்காது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை 120 டாலரை எட்டியுள்ள போதிலும், இந்தியா மாற்று வழிகளில் எண்ணெயைக் கொள்முதல் செய்து வருவதால் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறப்படுகிறது. மேலும், விமான எரிபொருள் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருப்பதால் அது குறித்தும் கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவை பொறுத்தவரை, பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுக்க சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால அவகாசம் 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.
வணிகப் பயன்பாட்டை விட வீட்டு உபயோக நுகர்வோருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. அத்துடன் அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடம் இருந்து எல்பிஜி இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
