உலக வல்லரசு நாடுகள் இப்போது வெறும் ஆயுதங்களுக்காகவோ அல்லது கச்சா எண்ணெய்க்காகவோ மட்டும் மோதிக்கொள்வதில்லை, எதிர்காலத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான கனிம வளங்களைக் கைப்பற்றவும் புதிய வியூகங்களை வகுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வெனிசுலா நாட்டிலிருந்து சுமார் 100 மில்லியன் டாலர் (சுமார் 830 கோடி ரூபாய்) மதிப்பிலான தங்கம் அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்துள்ளது. அமெரிக்க உள்துறைச் செயலர் டக் பர்கம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். வாஷிங்டன் நிர்வாகம் வெனிசுலா மீதான சில பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து, இந்தத் தங்கம் அமெரிக்காவுக்கு வந்துள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

​இந்தத் தங்க வர்த்தகம் வெறும் வியாபாரமாக மட்டும் பார்க்கப்படாமல், அமெரிக்காவின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த எதிர்காலத் தேவைகளுக்குத் தங்கம் போன்ற கனிமங்கள் மிக அவசியம் என்பதால், அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெனிசுலாவில் எண்ணெய் வளங்கள் மட்டுமின்றி, தங்கம் மற்றும் இரும்புத் தாது போன்ற கனிம வளங்களும் கொட்டிக்கிடக்கின்றன. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பப் போட்டி நிலவி வரும் வேளையில், இந்த கனிம வர்த்தகம் உலக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.