நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட கோரமான பனிப்பாறை மற்றும் நிலச்சரிவுப் பெருவெள்ளத்தில் சிக்கி, கிட்டத்தட்ட 9 நாட்களுக்குப் பிறகு குகைச் சுவரிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் ஒருவர் கூறிய தகவல்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளன. கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நிகழ்ந்த இந்த அற்புத மீட்புச் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேபாளத்தில் உள்ள திரிசூலி நீர் திட்டப் பகுதியில் ஃபோர்மேனாகப் பணியாற்றி வந்த 30 வயது நிரம்பிய சஞ்சய் ஷா வெள்ளம் ஏற்பட்டபோது மற்றவர்கள் தப்பியோடிய நிலையிலும், தனது சக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் அங்கேயே தங்கியுள்ளார். அப்போது ஏற்பட்ட இடிபாடுகளில் அவர் சிக்கிக் கொண்டார்.

 

வெள்ளம் வடிந்த பிறகும் குகைக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர், சுமார் 9 நாட்கள் உயிருடன் போராடியுள்ளார். மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட பின் ஆக்ஸிஜன் முகமூடியுடன் படுத்திருந்த அவர், தான் மாட்டிக்கொண்ட அந்த ஒன்பது நாட்களும் தனது மனதை அமைதிப்படுத்திக்கொள்ளத் தொடர்ச்சியாக ‘ஹரே கிருஷ்ணா’ மகாமந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்ததாகப் பாதுகாப்புப் படையினரிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்துக்களின் பண்டிகையான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில் சஞ்சய் ஷா மீட்கப்பட்டது தற்செயலானதல்ல என்று பலரும் சிலிர்ப்புடன் பேசி வருகின்றனர். இதே விபத்தில் மீட்கப்பட்ட மற்றொருவரான 45 வயதான கபீர் மகார்ஜன், உடல்நலக் குறைவு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள நேபாள ராணுவ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இந்தக் கோரப் பெருவெள்ளத்தின் காரணமாக நேபாளத்தில் உள்ள குறைந்தது 12 நீர்மின் திட்டங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாகவே இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தச் சோகச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,250ஐக் கடந்துள்ளதுடன், 4,800க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.