அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவின் பின்னணியில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கும், சாஹலுக்கும் இடையே மோதல் வெடித்ததாகத் தகவல்கள் பரவின.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் ஒரு நபரின் டி-சர்ட்டில், “நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு ஆதரவு கொடுங்கள், அல்லது நீங்கள் ஆதரிக்கும் நாட்டிற்கே சென்று வசியுங்கள்” (Support the country you live in or go live in the country you support) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
ஈரான் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சாஹலின் இந்த ‘தேசப்பற்று’ குறித்த பதிவு அந்தப் போராட்டங்களை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கூறி சர்ச்சையானது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சாஹலின் இந்தப் பதிவால் அதிருப்தியடைந்த வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமியும், முகமது சிராஜும் இன்ஸ்டாகிராமில் சாஹலை ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்துவிட்டதாகச் செய்திகள் காட்டுத்தீயாய் பரவின. குறிப்பாக, ஈரான் தலைவரின் மறைவால் இந்தியாவில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்தச் செய்தி மேலும் பரபரப்பைத் தூண்டியது.
இருப்பினும், சமூக வலைதளங்களில் பரவிய இந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் இன்னும் யுஸ்வேந்திர சாஹலை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து (Follow) கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்குள் எந்தப் பிளவும் ஏற்படவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பையில் முகமது சிராஜ் இந்திய அணியின் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ளார். அவர் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார். அதே சமயம், முகமது ஷமி மற்றும் சாஹல் ஆகியோர் தற்போதைய உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🚨Mohammed Siraj and Md Shami unfollowed Yuzi Chahal on Instagram 🚨 https://t.co/sJ6H4cEj0c pic.twitter.com/NKOaSlOoLV
— Courageous (@CourageousRo) March 2, 2026
மேலும் போர் பதற்றமான சூழலில், பொதுவெளியில் கருத்துக்களைப் பகிரும்போது விளையாட்டு வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், தேசப்பற்றைக் கூறுவதில் தவறில்லை என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
