ஈரானில் அணு ஆயுத உற்பத்தி நடைபெறவில்லை என்றும், அங்கு நடத்தப்படும் தாக்குதல்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் அணு ஆயுதத் தயாரிப்பிற்குத் தேவையான யுரேனியம் செறிவூட்டப்படுவதாகக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன.

இதற்குப் பதிலடியாக ஈரானும் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருவதால், கடந்த நான்கு நாட்களாக அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் குறையாமல் போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், அணு ஆயுதப் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்கா இந்தத் தாக்குதலைத் தொடங்கியிருந்தாலும், அது ஈரானைத் தற்காப்புக்காக அணு ஆயுதப் பாதைக்குத் தள்ளக்கூடும் என ரஷ்யா கவலை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடாக இஸ்ரேல் திகழும் நிலையில், ஈரானுக்கு எதிரான இப்போக்கு சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.