பாரிஸின் உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தின் பின்னணியில் இந்தியப் பெண்கள் பாரம்பரியமான புடவைகளை அணிந்து கொண்டு, மிகுந்த தன்னம்பிக்கையுடன் ரேம்ப் வாக் செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பெங்களூரைச் சேர்ந்த ‘தன்வி சில்க்ஸ்’ என்ற ஆடை நிறுவனத்தால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், பல நடுத்தர வயதுப் பெண்கள் விதவிதமான வண்ணமயமான புடவைகளை அணிந்து, ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உற்சாகமாக நடந்து வந்து போஸ் கொடுக்கின்றனர். உலக அளவில் புகழ்பெற்ற இந்த இடத்தில் இந்தியப் பாரம்பரிய உடையான புடவையை அவர்கள் அணிந்து சென்றது பலரையும் கவர்ந்துள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர், வெளிநாட்டில் இந்தியக் கலாச்சாரத்தை இவ்வளவு அழகாகவும் நம்பிக்கையுடனும் வெளிப்படுத்தியதற்காக அந்தப் பெண்களைப் பாராட்டி வருகின்றனர்.

அதேவேளையில், சுற்றுலாத் தலங்களில் இத்தகைய படப்பிடிப்புகள் மற்றும் பொது இடங்களில் செய்யப்படும் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்குமா என்ற விவாதங்களும் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றன. எவ்வாறாயினும், இந்தியப் பெண்கள் வெளிநாடுகளில் தங்கள் கலாச்சார அடையாளத்தோடு வலம் வருவது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.