இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ஆம் தேதி புகழ்பெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பயன்படுத்தப்படும் ‘டியூக்ஸ்’ வகை பந்துகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பந்துகள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டாலும், அவற்றைத் தைக்கும் பணிகள் இந்தியத் துணைக்கண்ட நாடுகளிலேயே நடைபெறுகின்றன.

தற்போதைய இஸ்ரேல்-ஈரான் போர்ச் சூழலால் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், தயாரான பந்துகளை இங்கிலாந்துக்குக் கொண்டு வருவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

இதனால் போக்குவரத்துச் செலவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதோடு, பந்துகள் வந்து சேருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி காரணமாக, சீசனின் தொடக்கத்தில் அணிகளுக்குத் தேவையான பந்துகளில் 50 சதவீதத்தை மட்டுமே வழங்கப்போவதாக டியூக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ‘கூகபுர்ரா’ பந்துகளைப் பயன்படுத்த கவுன்டி அணிகள் மறுத்துவிட்டதால், மாற்றுப் பாதைகள் மூலம் பந்துகளைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திலேயே பந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது விளையாட்டு ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.