மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் அனைவரையும் அதிர வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த ஏப்ரல் 27-28 தேதிகளில் உமெரத் பகுதியில் நடந்த இந்த திருமணத்தில், மாலை மாற்றும் சடங்கிற்காக மணமகன் மற்றும் மணமகள் மேடையில் தயாராக இருந்தனர்.
அப்போது திடீரென மணப்பெண் கையில் இருந்த மாலையுடன் மேடையிலிருந்து கீழே குதித்து ஓடி, அங்கிருந்த தனது காதலனை கட்டிப்பிடித்து அவர் கழுத்தில் மாலையைப் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் அந்த இளைஞரைத் தாக்கியதால் இரு வீட்டாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
View this post on Instagram
கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த இளைஞரை மணப்பெண் காதலித்து வந்ததும், குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் இந்த திருமணத்திற்குச் சம்மதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த களேபரத்தால் அதிர்ச்சியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டுத் தனது ஊருக்குத் திரும்பினார். சமூக ரீதியாக அவமானம் ஏற்பட்டதாகவும், பண இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
