அறிவியல் யுகத்தில் மனிதன் நிலவுக்குச் சென்றாலும், சில இடங்களில் மூடநம்பிக்கை இன்னும் வேரூன்றி இருப்பதை நிரூபிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், தனது தந்தையின் ஆத்மா இன்னும் மருத்துவமனையிலேயே தங்கியிருப்பதாகக் கருதி, அதை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒரு குடும்பமே மருத்துவமனைக்குத் திரண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பில்வாரா மாவட்டம், சோட்டி பிஜோலியா பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பிரஜாபதி. இவருடைய தந்தை கடந்த 2017-ஆம் ஆண்டு கோட்டாவில் உள்ள புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை மறைந்த பிறகு, தினேஷின் குடும்பத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் நிம்மதியின்மை எனத் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டதால், அவர் ஒரு பெண் மாந்திரீகரை அணுகியுள்ளார்.

அந்தப் பெண் மாந்திரீகர், தினேஷின் வீட்டின் வாஸ்து சரியில்லை என்றும், அவரது தந்தையின் ஆத்மா இன்னும் அவர் இறந்த மருத்துவமனையிலேயே அலைந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். “உன் தந்தையின் ஆத்மாவை முறைப்படி அழைத்து வந்து வீட்டில் அமர வைத்தால் மட்டுமே உன் கஷ்டங்கள் தீரும்” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை நம்பிய தினேஷ், மேளதாளங்கள் முழங்க, கையில் மண் கலசங்கள், பூமாலைகள் மற்றும் தூப தீபங்களுடன் கோட்டா மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையின்ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடங்கு பகுதியில் அமர்ந்து, மாந்திரீகர் முன்னிலையில் ஆத்மாவை அழைக்கும் வினோத பூஜைகளைச் செய்யத் தொடங்கினார். மருத்துவமனை வளாகத்தில் திடீரென மேளதாளங்கள் முழங்க பூஜைகள் நடந்ததைக் கண்டு அங்கிருந்த நோயாளிகளும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை இறந்த இடத்திற்கு வந்து ஆத்மாவை அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு குடும்பம் இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. துயரத்தில் இருப்பவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் இன்னும் ஒழியவில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.