திருப்பூர் மாவட்டம் கோயில்வழி என்னும் பகுதியில் 28 வயதான இளைஞர் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவம் நாளன்று வீட்டில் இளைஞர் மட்டும் தனியாக இருந்துள்ள நிலையில் சில மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரை மிரட்டியதுடன் அங்கிருந்து கூட்டிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து வெளியே சென்ற அவரது மனைவி வீட்டுக்கு வந்த பார்த்தபோது அவரது கணவன் வீட்டிலில்லை. அதன்பின் மறுநாளும் கணவன் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே அவரது கணவன் செல்போன் மூலம் தனது மனைவிக்கு தொடர்பு கொண்டு தன்னை சில மர்ம நபர்கள் ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளதாகவும் ரூபாய் 2 லட்சம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாகவும் அவர்கள் கூறியதை தெரிவித்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்ததுடன் சைபர் கிரைம் உதவியுடன் அந்த இளைஞரை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து பெருமாநல்லூரின் ஒரு இடத்தில் அந்த இளைஞரை மர்ம நபர்கள் அடைத்து வைத்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்து அவரை அங்கிருந்து மீட்டு வந்தனர்.

பின் காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். இதில் 6 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தியது தெரியவந்ததுடன் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சோமசுந்தரம், கோபால் ராஜ் மற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காவலர் லட்சுமணன் மற்றும் இவர்களது நண்பர்களான ஜெயராம், ஹரிஷ் அருண்குமார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் அந்த 6 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தவுடன் அவர்களிடம் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.