2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்யா விலகுகிறார். சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறத் தவறியதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஏற்கனவே ஜனவரி மாதம் தனது விலகல் குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்த ஜெயசூர்யா, தனது ஒப்பந்த காலம் மார்ச் 2026 வரை இருந்தபோதிலும், உலகக் கிண்ணத்துடன் விடைபெறுவதில் உறுதியாக உள்ளார். இலங்கை அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக 2024 ஜூலையில் பொறுப்பேற்ற ஜெயசூர்யா, பின்னர் அதே ஆண்டு அக்டோபரில் முழுநேர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும் இவரது காலப்பகுதியில் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி மற்றும் இங்கிலாந்தில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றி எனப் பல சாதனைகளை இலங்கை அணி படைத்தது. எனினும், நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் அடைந்த தோல்விகள் மற்றும் வீரர்களின் காயங்கள் அணியின் முன்னேற்றத்தைப் பாதித்தன.
