உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நிகழ்ந்த இந்த வினோதமான மற்றும் சோகமான சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. ஸ்ரீகேஷ் குமார் என்ற மின்சார வாரிய ஊழியர் சாலை விபத்தில் சிக்கியபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தவறாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக சுமார் ஏழு மணி நேரம் அவர் பிணவறை குளிரூட்டியில் வைக்கப்பட்டார்.
மேலும் மறுநாள் காலை பிரேதப் பரிசோதனைக்கான ஆவணங்களில் கையெழுத்திட வந்த அவரது உறவினர்கள், ஸ்ரீகேஷ் குமாரின் உடலில் அசைவு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ‘மரணத்தைத் தழுவி மீண்டும் உயிர் பெற்று வந்தவர்’ என இந்த அதிசயம் இந்தியா முழுவதும் பெரும் செய்தியாகப் பேசப்பட்டது. இருப்பினும், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. குளிரூட்டியில் வைக்கப்பட்டதால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள் மற்றும் விபத்தின் தீவிரத்தால் அவர் மீரட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும், மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக சிகிச்சை பலனின்றி 15 நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். ஒருமுறை உயிரிழந்ததாகக் கருதப்பட்டு மீண்டும் உயிர் பிழைத்தவர், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் மரணத்தைத் தழுவியது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவர்களின் கவனக்குறைவு குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
