ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு ஆட்டோ மொபைல் ஷோரூம் வாசலில், மோகன் என்ற ஈ-ரிக்ஷா உரிமையாளர் தனது வாகனத்தை நடுரோட்டில் வைத்துப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார்.

தனது ஈ-ரிக்ஷாவின் பேட்டரியில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதால், பலமுறை ஷோரூமில் புகார் அளித்தும் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அவர், திங்கள்கிழமை மதியம் 2 மணி அளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஐந்தாவது சாலை பகுதியில் தனது வாகனத்திற்குத் தானே தீ வைத்துள்ளார்.

ஈ-ரிக்ஷா கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு அங்கிருந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பயத்தில் சிதறி ஓடினர். இந்தச் சம்பவத்தை மோகன் தனது நண்பர்களைக் கொண்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்துள்ளார்.

வாகனம் எரிவதைப் பார்த்த அங்கிருந்த பெண் ஒருவர் பயத்தில் கதறி அழுதது பார்ப்பவர்களைக் கலங்க வைத்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், பேட்டரி புகாரால் விரக்தியடைந்த உரிமையாளர் எடுத்த இந்த விபரீத முடிவு அரசியல் மற்றும் சமூக ரீதியாகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.