மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தால் உலகெங்கும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் நேரடி பாதிப்பு பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ளது. நாடு தழுவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, இன்று (ஏப்ரல் 7) முதல் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை இரவு 8 மணிக்கே மூட பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பஞ்சாப், பலுசிஸ்தான், இஸ்லாமாபாத், கில்கிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து ஷாப்பிங் மால்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் மற்றும் சந்தைகள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும். ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்குள் தங்களது செயல்பாடுகளை முடித்துக் கொள்ள வேண்டும்.
மருந்தகங்கள் (Medical Stores) மற்றும் அவசர கால சேவைகளுக்கு மட்டும் இந்த நேரக் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு, ஹோமுஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 458.41 ரூபாய்க்கும், டீசல் 520.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மக்களின் கடும் அதிருப்தியைத் தொடர்ந்து, தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 378 ரூபாயாகக் குறைக்கப்பட்டாலும், இது சராசரி மனிதனின் எட்டாக்கனியாகவே உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்குச் சிறு ஆறுதல் அளிக்கும் வகையில், கில்கிட் மற்றும் முசாபராபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே ஒரு மாத காலத்திற்கு இலவச பொதுப் போக்குவரத்து சேவையை அரசு அறிவித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கில் போர் நீடிக்கும் பட்சத்தில், பாகிஸ்தானில் நிலவும் இந்த எரிசக்தி நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடையால், பாகிஸ்தான் போன்ற கடனில் தவிக்கும் நாடுகள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
