நாகை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் கோவில்கள் அதிகம் இருக்கிறது. அதனால் திருவிழாவின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இனி வரும் மாதங்கள் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவதனால் நிகழ்ச்சிகளின் போது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் கோர்ட் உத்தரவின் படி தமிழகத்தில் கோவில் திருவிழா காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த கடும் கட்டுப்பாடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கலைஞர்கள் ஆபாசமாக உடைகள் அணியக்கூடாது. இந்த கலை நிகழ்ச்சிகள் பொதுவான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். அதேபோல் ஒரு குறிப்பிட்ட தலைவர் மதம் மற்றும் ஜாதியை குறித்து இழிவாக பேசுவோ அல்லது பாடவோ ஆடவோ  கூடாது. அதேபோல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு 10 பேர் கொண்ட  விழா குழுவினர் நியமிக்கப்பட்டு அவர்கள் குறித்த பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்களை உள்ளூர் போலீஸ் நிலைய அதிகாரியிடம் நிகழ்ச்சி நடப்பதற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பாக வழங்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.