அதிமுகவில் அடிமட்ட தொண்டன் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் கட்சியின் விதி. இதை எம்ஜிஆர் கொண்டு வந்த நிலையில், ஜெயலலிதா அதை உறுதிப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் இணக்கமாக சென்றனர். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே நேரடியாக மோதல் வெளிப்பட தற்போது இருவரும் தலைமையை கைப்பற்றுவதில் போட்டி போட்டு வருகிறார்கள்.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்ம யுத்தத்தை தொடங்கி அவருடைய குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவையும் மீட்டார். அவருக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயரிய அதிகாரம் கிடைத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக பொறுப்பேற்றார். ஓபிஎஸ் எப்பவும் தன் கைக்குள் ஆட்களை போட்டுக் கொள்ள மாட்டார் என்று ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார். இதனால்தான் எடப்பாடி பக்கம் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இரண்டாவது தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளார். இதை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆதாயம் தேட விரும்புவதாக கூறப்படுகிறது. ஏனெனில் அதிமுக கூட்டணியில் இருந்தால்தான் பாஜகவுக்கு ஓரிரு இடங்களில் இடம் கிடைக்கும் . மேலும் டிடிவி தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா ஆகிய 4 பேரும் இணைந்து செயல்பட்டால் தான் அதிமுகவுக்கு பலம் என்று பாஜக வலியுறுத்துவதால் அனைவரையும் ஒன்றாக இணைந்து செயல்படுமாறு கூறி வருகிறது.

ஆனால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்துள்ளதன் காரணமாகவும் பெரும்பாலான நிர்வாகிகள் அவர் வசம் இருப்பதாலும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு வசமாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கடைசி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறப்படுவதால் அதிமுகவின் உச்ச அதிகாரம் யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.