தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றால் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு நல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதன்பிறகு கொடுத்த வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள திட்டங்களும் நிறைவேற்றப்படும் என ஆளும் கட்சி கூறிவரும் நிலையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்னும் 5 மாதங்களில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அடுத்த மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் விலக்கு மசோதா மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை மட்டும் செயல்படுத்தி விட்டால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டு வைத்துள்ளாராம். மேலும் தகுதியுள்ள நபர்கள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியான பிறகு அடுத்த 5 மாதங்களில் மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது