தாட்கோ நிறுவனத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கிராம பகுதிகளில் பயின்று வரும் மாணவர்கள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பின் தங்கிய பகுதிகளில் வசித்து வரும் மாணவர்களின் பொருளாதார நிலை காரணமாக முதன்மை தேர்வில் வெற்றி பெற போதுமான பயிற்சி பெற வாய்ப்பில்லை.

அதேபோல் நகர்புறங்களில் தங்கி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற 3 மாதங்களுக்கு சுமார் ஒரு லட்சம் வரை செலவாகிறது. அதனால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-1 ஆகிய தேர்வுகளில் முதன்மை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணமாக தலா ரூ.50,000 வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மற்ற தேர்வுகளில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25000 உதவித்தொகை அளிக்கவும் அரசு யோசித்து வருகிறது.

இதன் மூலமாக ஒரு மாணவருக்கு மூன்று முறை மட்டுமே மானியம் வழங்கப்படும். அரசு பணியில் பணியாற்ற போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற ஆண்டு வருமானம் உச்சவரம்பு ரூ.3 லட்சமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை இந்த திட்டத்தின் மூலம் செலவாகிறது. அதே போல் இது குறித்து அறிவிப்புகள் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.