மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர கமல்சிங் (25), குஜராத் மாநிலத்தில்  உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தபோது, சக ஊழியரான புஷ்பதேவி (20) என்ற இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டார்.

இருவரும் கடந்த மூன்று மாதங்களாக ‘லிவ்-இன்’ முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 29-ம் தேதி இரவு இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கமல்சிங், வீட்டில் இருந்த மரக்கட்டையால் புஷ்பதேவியை சரமாரியாகத் தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த புஷ்பதேவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், கமல்சிங்கை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கமல்சிங் இன்று திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த இந்தச் சம்பவம் மோர்பி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.