தமிழக மக்களுக்கு மேலும் அல்வா கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இருட்டுக்கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டுள்ளார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தைப்பூசத்திற்கு வாழ்த்து கூறியது பெரிய விஷயம் அல்ல. பிரதமர் பிரான்ஸ் நாட்டில் இருந்து தமிழ் மொழியில் கோஷங்கள் எழுப்பிய படி வாழ்த்தியிருக்கிறார். அதுதான் பாஜக ஆட்சியின் மகிமை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதுகூட சொல்லவில்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையாக விரதம் இருந்து வெகு தூரம் பாதயாத்திரை வருவார்கள் என்று தெரிந்தும் தமிழக அரசு எந்த ஒரு முன் ஏற்பாடும் செய்யவில்லை.

பக்தர்களுக்கு தேவையான நடைபாதை, கழிவறை, தண்ணீர் வசதி போன்ற ஒன்றுமே இல்லை. விவசாய கடன் ரத்து, நிரந்தர பணி நியமனம், செவிலியர் பணி நியமனம் என கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக முதலமைச்சர் சிறப்பாக அல்வா கொடுத்து கொண்டு இருக்கிறார் . மேலும் சிறப்பாக அல்வா கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்காகவே திருநெல்வேலி இருட்டுக்கடை கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.