இங்கிலாந்தின் செஷயர் (Cheshire) பகுதியில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணின் வாழ்க்கையையே நரகமாக்க முயன்ற அசாத் உசேன் (36) என்பவரின் செயல் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது முன்னாள் காதலியைப் பழிவாங்குவதற்காக, அவரது பெயரில் ‘டிண்டர்’ போன்ற செயலிகளில் போலி கணக்குகளைத் தொடங்கிய அசாத், அந்தப் பெண்ணுக்கு ‘வன்முறை கலந்த பாலியல் உறவில்’ விருப்பம் இருப்பது போன்ற பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளார்.
குறிப்பாக, “அவர் வேண்டாம் என்று சொன்னால், இன்னும் அதிகமாக வேண்டும் என்று அர்த்தம்” என்பது போன்ற மிக ஆபத்தான வாசகங்களைப் பயன்படுத்தி, அறிமுகமில்லாத ஆண்களை அந்தப் பெண்ணின் வீட்டு முகவரிக்குத் தூண்டிவிட்டுள்ளார். இதனை நம்பி, சுமார் 18-க்கும் மேற்பட்ட ஆண்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடுத்தடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமடைந்த ஒரு நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோது, வீட்டில் இருந்த அந்தப் பெண்ணும் அவரது குழந்தைகளும் பெரும் அச்சத்தில் உறைந்தனர்.
இது குறித்துப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, செஷயர் போலீசார் டிஜிட்டல் தடயங்களை வைத்து அசாத் உசேனை கைது செய்தனர். நீதிமன்ற விசாரணையில், அவர் செய்த இந்தத் திட்டமிட்ட சதி அம்பலமானதைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் கையாண்ட வழக்குகளிலேயே இதுதான் மிகவும் கொடூரமானது” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
