தமிழ்த்திரையுலகில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசுக்கூடிய மிரட்டல் நாயகனாக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி. 2002ஆம் ஆண்டு வெளியான ஏப்ரல் மாதத்தில் படம் மூலம் அறிமுகமான இவர், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், என்னை அறிந்தால், வை ராஜா வை, பைரவா, வட சென்னை, பிகில், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய மிரட்டல் வசனங்களாலும், பன்முகத் திறமை கொண்ட நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த டேனியல் பாலாஜி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அதே போல் இவர் மறைந்த நடிகர் முரளியின் மைத்துனரும் கூட.

இந்த நிலையில், 48 வயதிலேயே திடீர் மாரடைப்பால் டேனியல் பாலாஜி மரணமடைந்த செய்தி கேட்டு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். அவரது இறுதிச் சடங்கு இன்று சென்னை ஓட்டேரி மின் மயானத்தில் நடைபெறவுள்ளது. அவரது மறைவையொட்டி, இயக்குநர்கள் கௌதம் மேனன், அமீர், வெற்றி மாறன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.