கர்நாடகாவின் சிவமொகா மாவட்டத்தில் ஒரு பரபரப்பான சந்திப்பில் நடந்த விபத்து ஒரு வைரல் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநர் சாலையை கவனிக்காமல் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் அவரை மோதி தூக்கி வீசியது. இந்த மோதல் மிகவும் கடுமையாக இருந்ததால், ஸ்கூட்டரும் காரும் அருகில் இருந்த ஒரு குடிசையில் மோதின. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும், இருவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்துக்கு இரு தரப்பும் காரணமாக இருந்ததாக தெரிகிறது. ஸ்கூட்டர் ஓட்டுநர் சாலையை கவனிக்காமல் கடக்க அதேநேரம் கார் ஓட்டுநர் வேகமாக வந்ததால் பிரேக் போட முடியவில்லை. இந்த சந்திப்பு மிகவும் பரபரப்பான பகுதியாக இருந்தாலும், அங்கு ட்ராஃபிக் சிக்னல் அல்லது வேகத்தடை இல்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும், நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விபத்துக்கு யார் காரணம் என விசாரித்து வருகின்றனர். மக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும், இல்லையெனில் இதுபோன்ற விபத்துகள் தொடரும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.