உத்தரப்பிரதேசம் மொராதாபாத்தைச் சேர்ந்த சம்ரீன் என்ற இளம்பெண்  செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வேலைக்குச் சென்ற அவர், அன்றைய தினம் வீடு திரும்பவில்லை.

பல நாட்கள் தேடியும் எந்தவிதமான தகவலும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர்  போலீஸில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் தொடர்பான விசாரணையில், சம்ரீனின் மொபைல் அழைப்பு பதிவுகள், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.

அதில், ‘கவுஸ் ஆலம்’ என்ற இளைஞருடன் சமீபகாலமாக அதிகமாக பேசிவருவதை போலீசார் கண்டறிந்தனர். இந்நிலையில், கவுஸ் ஆலமைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, சம்ரீனுடன் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டதாகவும், சமீபத்தில் அவரை திருமணம் செய்ய சம்ரீன் அதிக அழுத்தம் கொடுத்ததால், அவரை அழைத்து வந்து தனது நண்பருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில், போலீசார் காட்டிய இடத்தில் சென்று, கரும்புத் தோட்டத்தில் புதைத்த நிலையில் சம்ரீனின் உடலை மீட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட கவுஸ் ஆலம் ஒரு லாரி ஓட்டுநர். அவர் கூறுகையில், சம்ரீன் தனது வாழ்க்கையில் தலையிடுவதாகவும், திருமணத்திற்காக பலமுறை வற்புறுத்தியதாகவும், அவளிடமிருந்து விலக முடியாமல் இருந்ததால், கொலை செய்ததாக தெரிவித்தார். இந்நிலையில், அவனுடன் இருந்த மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமூக ஊடகங்களில் உருவான நட்பு, ஒருவரது உயிரை பறித்த துயர சம்பவமாக இது திகழ்கிறது. தற்போது, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.