பீகாரில் காதலர் தினத்தை முன்னிட்டு கணவருக்கு ஒயின் ஊற்றிக் கொடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள நிலையில், தனது கணவருடன் மது அருந்துவது போன்ற காட்சிகளை அவர் கொண்டாட்டமாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மதுவிலக்கு சட்டத்தை மீறியதாக அந்தப் பெண் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்துவதை ஒரு கொண்டாட்டமாக பொதுவெளியில் பதிவிட்டது அந்தப் பெண்ணுக்கு வினையாக முடிந்துள்ளது.

பீகாரில் மது விற்பனை மற்றும் நுகர்வு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், இதுபோன்ற செயல்கள் சட்டப்படி கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, “லைக்குகளுக்காக” சட்டத்தை மீறும் ஆபத்து குறித்து ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.