தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக சனிக்கிழமைகளில் மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.
இதற்கேற்ப, அவர் இன்று (சனிக்கிழமை) நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், தவெக தலைமையகம் கட்சி தொண்டர்களுக்காக முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
> “தமிழக வெற்றிக் கழகம் ஒரு பொறுப்பு மிக்க அரசியல் இயக்கம் என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபிக்க வேண்டும். மக்கள் மீதான அக்கறையோடு, தலைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” அதன்படி,
1. தலைவரின் வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது – இருசக்கர வாகனமோ, கார், வேனோ இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.
2. பொதுமக்கள் மற்றும் சொத்துக்களுக்கு இடையூறும் சேதமும் ஏற்படக்கூடாது – அரசு அல்லது தனியார் சொத்துக்கள், சிலைகள், மின் கம்பங்கள், மரங்கள், கொடிக் கம்பங்கள் உள்ளிட்டவற்றின் அருகில் செல்தல் தவிர்க்கப்பட வேண்டும். மேலே ஏறுதல் கண்டிப்பாகத் தடை செய்யப்படுகிறது.
3. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தையுடன் உள்ளோர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் நிகழ்ச்சியை நேரலையில் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. யாரும் நேரில் வரவண்டாம்
4. ஆம்புலன்ஸ், பொது மக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது – காவல்துறையின் அறிவுறுத்தலின் படி, வரவேற்பு நிகழ்வுகளும் தவிர்க்கப்பட வேண்டும்.
5. வாகனங்களை வழிமுறையோடு நிறுத்த வேண்டும் – பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தவே கூடாது.
6. தொண்டர்கள் அனைவரும் மரியாதை, ஒழுக்கம், சகோதரத்துவம் பேண வேண்டும் – மாற்றுப் பார்வைகள் உள்ளவர்களையும் மரியாதையாக அணுக வேண்டும்.
7. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் – நிகழ்ச்சியின் போது அல்லது போக்குவரத்தில் சந்திக்கும் இடங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
8. பிளக்ஸ் பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடி கம்பங்கள் ஆகியவை உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறாமல் வைக்கப்பட வேண்டும் – உரிய அனுமதி இல்லாமல் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
9. பட்டாசு வெடிப்பு முழுமையாகத் தடை – தலைவரின் வருகையையொட்டி தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது.
10. காவல்துறை விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும்.
11. நிகழ்ச்சி முடிந்தவுடன் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் – யாருக்கும் இடையூறும் ஏற்படாமல் சீராக வெளியேற வேண்டும்.
மேலும் இவ்வாறு, விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் அமைதியாகவும், ஒழுங்காகவும் நடைபெற, கட்சி தொண்டர்கள் அனைவரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கட்சி தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.
