தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 2026-ல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் பரப்புரை சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி நாகையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி,
பரப்புரை நிகழ்ச்சி மதியம் 12:25 முதல் 1:00 மணிக்குள் முடிவடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரப்புரை நிகழ்வுக்காக வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதியை கட்சி நிர்வாகிகளே ஏற்பாடு செய்ய வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் வாஞ்சூர் ரவுண்டானா பகுதி, தமிழ்நாடு–புதுச்சேரி எல்லைக்கு அருகிலுள்ள பகுதியாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்தில் இடையூறு ஏற்படக்கூடாது.
கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் முதியவர்கள் சிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பரப்புரையில் கம்பு, குச்சி, ஆயுதம் போன்றவற்றை யாரும் வைத்திருக்க கூடாது.
அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது. ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பும் கட்சியினருக்கே என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தூர் அண்ணா சிலை பகுதியில் ரெயில்வே கேட் இருப்பதால், ரெயில் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தகூடாது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிற சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி இல்லை.
விஜய் செல்லும் பரப்புரை வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது.
அந்த வாகனத்தின் முன்பாகவும் பின்பாகவும் இருசக்கர வாகனம் அல்லது கார்கள் செல்லக்கூடாது.
மேலும், அண்ணா மற்றும் பெரியார் சிலை தடுப்புகள் மீது ஏறி எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த நிபந்தனைகளை கடைபிடித்து, பரப்புரை சுமுகமாக நடைபெற வேண்டியதும், பொதுச்சமூகத்திற்கும் இடையூறு ஏற்படக்கூடாதென்றும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
