இன்று முதல் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் அரசு சேவைகள் சார்ந்த பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயிக்கும் நிலையில், இந்த மாதமும் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, சமையல் எரிவாயு இணைப்புக்கான இ-கேஒய்சி நடைமுறையை முடிக்கக் நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்துள்ளதால், அதனை முடிக்காதவர்கள் இனி கூடுதல் விலையைக் கொடுக்க நேரிடலாம்.
பயணிகள் விமான நிலையங்களில் எளிதாகச் செல்லும் வகையில், வெளிநாடு செல்வோர் இனி மொபைலில் உள்ள இ-போர்டிங் பாஸ் அல்லது அதன் நகலைக் காட்டியே குடியேற்றச் சோதனைகளை விரைவாக முடித்துக் கொள்ளலாம் என்ற புதிய வசதியும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், வங்கிகளின் ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இலவச வரம்பைத் தாண்டிப் பயன்படுத்தும்போது கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 மற்றும் 15 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று கைரேகை மற்றும் கருவிழி விவரங்களைச் கட்டணமின்றிப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
