தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் புதிய டிஜிட்டல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ‘டிஜிட்டல் இண்டென்ட் சிஸ்டம்’ எனப்படும் இந்த புதிய நடைமுறையின் மூலம், ஒவ்வொரு கடைக்கும் தேவையான மதுபானங்களின் இருப்பு அளவைத் தானாகக் கணக்கிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடைகளில் குறிப்பிட்ட பொருள்களுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படும் கையடக்க விற்பனை கருவிகளில் பதிவாகும் விற்பனைத் தரவுகளின் அடிப்படையில் புதிய முறை செயல்படும். முந்தைய நாள்களில் எந்தெந்த பொருள்கள் அதிகமாக விற்பனையாகின, அவற்றுக்கு எவ்வளவு இருப்பு தேவைப்படுகிறது என்பன போன்ற விவரங்களை கணினி ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் அடுத்த நாளுக்குத் தேவையான இருப்புக்கான பட்டியல் தானாக உருவாக்கப்படும். இதனால் ஊழியர்கள் தனியாக கணக்கிட்டு தேவையைத் தயாரிக்கும் பணிச்சுமை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாள்களில் வழக்கத்தைவிட கூடுதல் தேவை ஏற்பட வாய்ப்புள்ளதால், கணினி பரிந்துரைக்கும் அளவைவிட 20 சதவீதம் வரை கூடுதலாக இருப்பு கோர கடை மேற்பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆர்டரை உறுதி செய்வதற்காக ஊழியர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் ரகசிய எண் அனுப்பப்படும். அதனைப் பதிவு செய்ததும் தேவையான இருப்பு தொடர்பான விவரங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட கிடங்குகளுக்குச் சென்றடையும் வகையில் இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டிஜிட்டல் முறையின் மூலம் எந்தப் பகுதியில் எந்தப் பொருளுக்கு அதிக தேவை உள்ளது என்பதை விற்பனைத் தரவுகளின் அடிப்படையில் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் தேவைக்கேற்ப இருப்பைச் சீராக விநியோகிக்கவும், கடைகளில் ஏற்படும் தட்டுப்பாட்டைக் குறைக்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இருப்பு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், தேவையான பொருள்கள் கிடைப்பதில் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.