தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், “காங்கிரஸ் இல்லாவிட்டால் திமுக 25 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது” எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. விசிக மற்றும் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், காங்கிரசுக்கு 25 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்மல் குமார் கூறியதாவது, திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது என்று கூற முடியாது. கடைசி நேரத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். காங்கிரஸ் இல்லாத கூட்டணியால் திமுகவால் 25 இடங்களில் கூட வெற்றி பெறுவது கடினம். தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றார்.
கடைசி நேரத்தில் கூட்டணி மாறலாம் என்று குறிப்பிட்ட அவர், என்.டி.ஏ (NDA) கூட்டணியிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதிமுக – பாஜக கூட்டணியில் தலைமை யார் என்பதில் தெளிவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பும் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் எந்த முடிவை எடுத்தாலும் அக்கட்சியில் பிளவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அதே நேரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து செல்வ பெருந்தகை தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் திமுகவுடன் தான் கூட்டணி எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
