ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர், உலகளவில் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தான் மிகக்கடுமையான பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. போரின் விளைவாக பாகிஸ்தானில் வீட்டு உபயோக எரிவாயு (LPG) விலை ஒரே நாளில் 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (OGRA) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 11.8 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை ₹923.71 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிலிண்டரின் விலை ₹3,588.59 ஆக உயர்ந்துள்ளது. போர் தொடங்கிய பிறகு சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் அந்நாட்டு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மீது இது பேரிடியாக விழுந்துள்ளது.

பாகிஸ்தான் தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 முதல் 85 சதவீதத்தை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிடமிருந்தே இறக்குமதி செய்கிறது. இந்த எண்ணெய் கப்பல்கள் அனைத்தும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கராச்சியை வந்தடைய வேண்டும். தற்போது இந்த ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால், எண்ணெய் விநியோகம் தடைபடும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது.

எண்ணெய் இருப்பு குறைந்து வருவதால், எரிசக்தியைச் சேமிக்க பாகிஸ்தான் அரசு அதிரடி தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது அரசு ஊழியர்களில் 50 சதவீதத்தினர் வீட்டிலிருந்தே பணிபுரிய (உத்தரவிடப்பட்டுள்ளது. அலுவலகங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்குகின்றன. பள்ளிகள் மூடப்பட்டு, வகுப்புகள் இணையவழியில் (Online) நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 45 லட்சம் பாகிஸ்தானியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணியே பாகிஸ்தான் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாகும். போர் நீடித்தால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கும் என்பதால், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இஸ்லாமாபாத்தில் விரைவில் அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.